வடகாடு பகுதியில் மஞ்சள் கொத்துகள் அறுவடைக்கு தயார்

வடகாடு பகுதியில் மஞ்சள் கொத்துகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
வடகாடு பகுதியில் மஞ்சள் கொத்துகள் அறுவடைக்கு தயார்
Published on

வடகாடு,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை பொங்கல் வைத்து, அதனை நெல், காய்கறிகள், கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்டவற்றுடன் படைத்து, சூரியனை வழிபடுவது வழக்கம். சில பகுதிகளில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் பொங்கல் பானையிலும், மஞ்சள் கொத்தை சுற்றுவார்கள். மேலும் திருமணமான பெண்களுக்கு, அவர்களது தாய் வீட்டில் இருந்து வழங்கப்படும், பொங்கல் சீர்வரிசையில் கரும்பு, காய்கறிகளுடன் மஞ்சள் கொத்தும் இடம்பெறும்.

இவ்வாறு பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் வகிக்கும் மஞ்சள் கொத்துகளுக்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர், கறம்பக்குடி, அன்னவாசல், வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மாங்காடு, பனசக்காடு, கொத்தமங்கலம், குளமங்களம், பனங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அறுவடைக்கு தயார்

மஞ்சள் பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து, மஞ்சள் கொத்துகளாக அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு இவற்றை அறுவடை செய்து, விவசாயிகள் விற்பனை செய்வார்கள். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், மஞ்சள் பயிர்களை, அந்தந்த ஊர்களில் உள்ள விவசாயிகளே உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

மஞ்சள் பயிர் உற்பத்தி காலம் 6 மாதங்கள் ஆகும். புதுக்கோட்டை வார சந்தைகளில் ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் மட்டுமே விற்பனைக்கு வரும் விதை மஞ்சள்களை நாங்கள் வாங்கி வந்து சாகுபடி செய்து வருகிறோம். இந்த பயிர் தை மாதத்தில் அறுவடைக்கு வரும். கடந்த ஆண்டு ஒரு மஞ்சள் கொத்து ரூ.30 முதல், விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு உற்பத்தி அளவை பொருத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். உற்பத்தி அதிகமாக இருந்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது, என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com