மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் யோகா திருவிழா

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் நடந்த யோகாசன திருவிழாவில் மீன் வளத்துறை பணியாளர்கள், இறால், மீன் விற்பனையாளர்களுடன் அமர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் யோகாசனம் செய்தார்.
மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் யோகா திருவிழா
Published on

யோகா விழிப்புணர்வு

ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி நாடு முழுவதும் உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு பிற துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் 2022-ம் ஆண்டில் யோகா மஹோற்சவத்தை முன்னிட்டு ஜூன் 21-ந்தேதிக்கு 100 நாட்களுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் உள்ள ஆக்ரா, டெல்லி, கஜிராகோ, ஒரிசா, பூரி, மும்பை, கோவா, ஐதராபாத், கொல்கத்தா, கன்னியாகுமரி, ஊட்டி, கொடைக்கானல், அஜந்தா, எல்லோரா, மைசூர், மாமல்லபுரம் என ஒவ்வொரு சுற்றுலா பகுதிகளில் யோகா பற்றிய விழிப்புணர்வு நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் வளாகத்தில் மத்திய மீன்வளத் துறை சார்பில் துறை யோகாசன திருவிழா நேற்று நடந்தது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், கோவளம், முட்டுக்காடு, கேளம்பாக்கம், நீலாங்கரை, பட்டினப்பாக்கம், காசிமேடு, ராயபுரம், கோவளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீன், இறால் வியாபாரிகள் மற்றும் மீன்வளத்துறை அலுவலாகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து அசத்தினர்.

மத்திய மந்திரி பங்கேற்பு

முன்னதாக விழாவில் மத்திய மீன்வளத்துறை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு யோகாசன பயிற்சியை தொடங்கி வைத்து, மீன் வளத்துறை பணியாளர்கள் மற்றும் மீன், இறால் வியாபாரிகளுடன் அமர்ந்து அவரும் சுமார் 2 மணி நேரம் யோகாசனம் செய்தார். இதில் யோகாசன பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் பல்வேறு ஆசனங்கள் வாயிலாக யோகா பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மீன் வளத்துறையின் யோகா திருவிழாவால் கடற்கரை கோவில் வளாக புல்வெளி மைதானம் யோகா கலைகளை பயிற்றுவிக்கும் ஒரு பள்ளிக்கூடமாக மாறி காட்சி அளித்து களைகட்டியது.

இந்த நிகழ்ச்சியில் கடலோர மீன்வளாப்பு ஆணைய தலைவர் அமர்சிங்சவுகான், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர், தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வேதாசுப்பிரமணியம், மாமல்லபுரம் நகர பா.ஜ.க. தலைவர் தணிகைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com