10 மாத குழந்தையுடன் இளம்பெண் உடல் கருகி பலி

10 மாத குழந்தையுடன் இளம்பெண் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர்களது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 மாத குழந்தையுடன் இளம்பெண் உடல் கருகி பலி
Published on

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள பெருங்காப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை மகன் செல்வராஜ்(வயது 27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பம்மல் பகுதியில் தங்கி, கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவர், அதேபகுதியை சேர்ந்த ரேகா(21) என்ற பெண்ணை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் பெருங்காப்பூர் கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நவீன் என்ற 10 மாத ஆண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் அதேஊரை சேர்ந்த செல்வராஜியின் பெரியப்பாவான ராமதாஸ் என்பவர் தனது விளை நிலத்தில் புதிதாக கட்டியுள்ள அய்யனாரப்பன் கோவிலுக்கு, ஆகஸ்டு 2-ந்தேதி (அதாவது நேற்று) கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக செல்வராஜியின் உறவினர்கள் மற்றும் ரேகாவின் பெற்றோர் பெருங்காப்பூர் கிராமத்துக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் ரேகாவும், நவீனும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதைபார்த்த செல்வராஜியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ரகமத்துல்லா ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மர்மமான முறையில் உடல் கருகி இறந்து கிடந்த 2 பேரின் உடலை பார்வையிட்டு, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து தாய், மகனின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரேகாவின் தந்தை அருள்தாஸ் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது மகளை பார்க்கவும், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காகவும் நானும், எனது மனைவியும் பெருங்காப்பூருக்கு வந்திருந்தோம். நேற்று முன்தினம் இரவு நாங்கள் ரேகா மற்றும் பேரக்குழந்தையுடன் வீட்டின் மொட்டைமாடியில் படுத்து தூங்கினோம். நேற்று அதிகாலை 3 மணியளவில் மருமகன் செல்வராஜ் மாடிக்கு வந்து, தனது மனைவியையும், குழந்தையையும் கீழே வீட்டுக்குள் அழைத்து சென்றார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வீட்டின் ஜன்னல் வழியாக புகை வெளியேறியது. இதை உணர்ந்த நாங்கள் உடனே கீழே இறங்கி வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, ரேகாவும், நவீனும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

மேற்கண்டவாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

அதன்அடிப்படையில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறு காரணமாக இளம்பெண், தனது மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த இளம்பெண் தனது குழந்தையுடன் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com