திருச்சியில் இன்று ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இரவிலேயே குவிந்த இளைஞர்கள்

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் திருச்சியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இரவிலேயே ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.
திருச்சியில் இன்று ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இரவிலேயே குவிந்த இளைஞர்கள்
Published on

திருச்சி,

திருச்சியில் உள்ள 117-வது பிரதேச ராணுவ படையில் 57 சிப்பாய் (பொதுப்பணி) மற்றும் எழுத்தர், சலவை பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான ஆள் சேர்ப்பு முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

சிப்பாய் பொதுப்பணிக்கு 45 சதவீத மதிப்பெண்களுடன் மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்தர் பணிக்கு கம்ப்யூட்டர் மற்றும் தட்டச்சு பயிற்சி முடித்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சலவை பணியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடலில் பச்சை குத்தியவர்களுக்கு அனுமதி இல்லை.

வருகிற 17-ந் தேதிவரை நடக்கும் இந்த முகாமில் 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்க தகுதியானவர்கள். இன்று அதிகாலை 5 மணிக்கு ராணுவ பயிற்சி மையத்தில் ஆஜராகவேண்டும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களும், வெளி மாநில இளைஞர்களும் நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை ரெயில் மற்றும் பஸ்களில் தங்களது உடைமைகளுடன் திருச்சிக்கு வந்த வண்ணம் இருந்தனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் இரவிலேயே வந்ததால் திருச்சி ஜங்சன் பகுதியில் இளைஞர்கள் பட்டாளமாகவே காணப்பட்டது. அவர்கள் இரவில் ஆங்காங்கே உணவு சாப்பிட்டு விட்டு ரெயில் நிலையம் முன்பு மற்றும் மன்னார்புரம் ராணுவ பயிற்சி மையம் அருகிலேயே படுத்து ஓய்வெடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com