இளைஞர்கள் ஆளுமை திறனை வளர்த்து கொள்ள வேண்டும்: போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர் பேச்சு

ஆதிவாசி இளைஞர்கள் ஆளுமை திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என கூடலூரில் நடந்த பயிற்சி முகாமில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர் பேசினார்.
இளைஞர்கள் ஆளுமை திறனை வளர்த்து கொள்ள வேண்டும்: போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர் பேச்சு
Published on

கூடலூர்,

நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் சார்பில் ஆதிவாசி இளைஞர்களுக்கு ஆளுமை பண்பை வளர்த்து கொள்வது குறித்த பயிற்சி முகாம் கூடலூர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு சங்க மேலாளர் சிங்கராஜ் தலைமை தாங்கினார். மனோகரன் முன்னிலை வகித்தார். கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஆதிவாசி இளைஞர்கள் எந்த விஷயத்திலும் உடனடியாக முடிவு எடுக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்த்து வாழக்கூடாது. அதற்கான ஆளுமை திறனை வளர்த்து கொள்ள வேண்டும். தலைமை பண்பு, ஆளுமை திறன், காலத்தை முறையாக பயன்படுத்துதல் என 3 விஷயங்களையும் சரியாக கடைபிடித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

பிளஸ்-2 படித்தவர்கள் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வியை படிக்கலாம். இல்லை எனில் அரசு துறைகளில் ஆதிவாசி மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக வனம், காவல் துறைகளில் பணியிடங்கள் உள்ளன. இதனால் பிளஸ்-2 படித்த இளைஞர்கள், பெண்கள் அரசு வேலைவாய்ப்புகளில் சேர ஆர்வம் காட்ட வேண்டும். இதேபோல் சுகாதாரத்துக்கும் ஆதிவாசி மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் பொது அறிவுகளை வளர்த்து கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம். கணினி கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். செல்போன்களை உபயோகப்படுத்துவதை குறைத்து கொண்டு நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை படிக்க வேண்டும். இதனால் நிறைய விஷயங்களை கற்று கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஆதிவாசி இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பிளஸ்-2 படித்த இளைஞர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com