நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு இளம் வாக்காளர்கள் ஒத்துழைக்கவேண்டும் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், இளம் வாக்காளர்கள், 100 சதவீத வாக்குப்பதிவிற்கு ஒத்துழைக்கவேண்டும். என, மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ராந்த்ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு இளம் வாக்காளர்கள் ஒத்துழைக்கவேண்டும் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
Published on

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை, இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், தினந்தோறும் ஒவ்வொரு கல்லூரிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான விக்ராந்த்ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் தம்பிதுரை, ஸ்வீப் அதிகாரி லட்சுமணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ராந்த்ராஜா பேசியதாவது:-

காரைக்காலில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இளம் வாக்காளர்கள் வருகிற 18ந் தேதி எந்தவித அச்சமும் இன்றி, நேர்மையாக வாக்களிக்க முன்வரவேண்டும். தாங்கள் வாக்களிப்பதோடு, தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் 100 சதவீத வாக்களிக்க ஒத்துழைக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக, மாணவர்கள் புகார் அளிக்க விரும்பினால், தேர்தல் துறையின் சி-விஜில் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து, அதில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் துறைக்கு அனுப்பினால் 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை கன்னி கோவில் தெரு, திருநள்ளாறு பேருந்து நிலையம் மற்றும் கிராமப்புறங்களில், அரசு பள்ளி ஆசிரியர் முருகன் தலைமையில், மாவட்ட துணை ஆட்சியர் பாஸ்கரன், சுவிப் அதிகாரி லட்சுமணபதி முன்னிலையில், கரகாட்டம், காளியாட்டம், வில்லுபாட்டு மூலம் நேற்று முன்தினம் இரவு 100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் பணம் வாங்காமல் வாக்களிப்பது, 1950 என்ற இலவச தொலைபேசி எண் வி.வி.பாட் எந்திரத்தின் செயல்பாடு குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் ஓர் பகுதியாக, பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி சார்பில், பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பைகள் வழங்கப்பட்டது.

மாவட்ட தேர்தல் துறை சார்பில், கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று ஆட்டோ ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஆட்டோ ஊர்வலத்தை, மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ராந்த்ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மாரிமுத்து, வீர வல்லபன் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில், 70க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கலந்து கொண்டது. ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோட்டுச்சேரியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில், வரும் ஏப்ரல் 18ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து, 100 சதவீத வாக்குப்பதிவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது. என வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com