உங்கள் பிரசார கூட்டங்களில் ஜனார்த்தனரெட்டி பங்கேற்பாரா? பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி

ஊழலை ஒழிப்பதை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறீர்கள். உங்கள் பிரசார கூட்டங்களில் ஜனார்த்தனரெட்டி பங்கேற்பாரா? என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் பிரசார கூட்டங்களில் ஜனார்த்தனரெட்டி பங்கேற்பாரா? பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று(செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் வருகையையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் மோடியை வரவேற்று ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

தாங்கள்(பிரதமர் மோடி) நாளை(இன்று) கர்நாடகத்திற்கு பிரசாரம் நடத்த வருவதாக கேள்விப்பட்டேன். எங்கள் மாநிலத்திற்கு வரும் தங்களை வரவேற்கிறேன். இங்கு பிரசாரத்தில் பேசும்போது, சில விஷயங்கள் குறித்து தாங்கள் பேச வேண்டும் என்று கன்னடர்கள் விரும்புகிறார்கள். அதாவது, நீங்கள் பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் ஜனார்த்தனரெட்டி கலந்து கொள்வாரா?.

10 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று கருதி அவருடைய குடும்பத்திற்கு 8 டிக்கெட்டுகளை நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஊழல் ஒழிப்பு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறீர்கள். நீங்கள் முதலில் ஊழல் கறை படிந்த எடியூரப்பாவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்தீர்கள்.

அதன் பிறகு எடியூரப்பாவுடன் நீங்கள் பிரசார மேடையில் அமர விரும்பவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. எடியூரப்பா இன்னமும் உங்கள் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளரா? என்பதை கர்நாடக மக்கள் அறிய விரும்புகிறார்கள். கர்நாடகத்தில் கற்பழிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள், சட்டசபை கூட்டத்தில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு நீங்கள் டிக்கெட் வழங்கி இருக்கிறீர்கள்.

உத்தரபிரதேசத்தில் 16 வயது பெண்ணை கற்பழித்ததாக கூறப்படும் புகாரில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வை முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் பாதுகாக்கிறார். ஆனால் கர்நாடகத்தில் கற்பழிப்புகள் குறித்து கொச்சையான முறையில் உங்கள் கட்சி விளம்பரப்படுத்தி அரசியல் நடத்துகிறது. கருப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினீர்கள். ஆனால் அதை தேர்தலை மனதில் வைத்து கூறியதாக அமித்ஷா சொன்னார்.

இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக சொன்னீர்கள். ஆனால் பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று கூறுகிறீர்கள். கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு திட்டத்தை அமல்படுத்துவதாக கூறினீர்கள். அதனால் சாமானிய மக்கள் தான் கஷ்டப்பட்டனர். விவசாய விளை பொருட்களுக்கு ஆதரவு விலையை உயர்த்தி கொடுப்பதாக உறுதி அளித்தீர்கள். ஆனால் இப்போது விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்துவதாக சொல்கிறீர்கள். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் உங்களுக்கு ஈடுபாடு உள்ளதா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com