சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்

சென்னை சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகிறார்கள்.
சைதாப்பேட்டையில் வாலிபர் படுகொலை; மனைவியின் காதலனை தேடும் போலீசார்
Published on

கள்ளக்காதல்

சென்னை சைதாப்பேட்டை, ஜெயராமன் தெருவில் வசித்தவர் கோதண்டபாணி (வயது 36). இவர் வீடுகளுக்கு உள்அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பெயர் நிரோஷா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இனிமையாக வாழ்ந்த இவர்களது வாழ்க்கையில் கள்ளக்காதல் குறுக்கே வந்தது. மணிகண்டன் (30) என்பவருடன், நிரோஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கோதண்டபாணி முதலில் கோடம்பாக்கத்தில் வசித்தார். அப்போதுதான் மணிகண்டன் குறுக்கே புகுந்தார். டெய்லர் கடை நடத்தி வந்த மணிகண்டன், துணி தைக்க வந்தபோது நிரோஷாவை நேசிக்க தொடங்கினார். கோதண்டபாணி வெளியில் சென்ற நேரத்தில், மணிகண்டன் அவரது வீட்டுக்குள் புகுந்து விடுவார். நிரோஷாவும் அவரும் உல்லாசத்தில் பறப்பார்கள்.

கதவை பூட்டி தகராறு

இந்த கள்ளக்காதல் விவகாரம் கோதண்டபாணிக்கு தெரியாது. கோதண்டபாணி வாடகை வீட்டில் வசித்தார். அந்த வீட்டின் உரிமையாளருக்கு, மணிகண்டன்-நிரோஷா காதல் விவகாரம் தெரியவந்தது. அவர் கண்டித்தார். ஆனால் அந்த

கண்டிப்பு காதலை நிறுத்தவில்லை.இதனால் வீட்டு உரிமையாளர், கோபம் கொண்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். மணிகண்டன்-நிரோஷா தனிமையில் உல்லாசமாக இருந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டார். இதனால் கள்ளக்காதல் வெளிச்சத்துக்கு வந்தது. கோதண்டபாணி கடும் அவமானம் அடைந்தார்.

பிரிந்து வாழ்ந்தார்

நிரோஷாவை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டு, அவரை விட்டு பிரிந்து கோதண்டபாணி தனிமையில் வாழ்ந்தார். பின்னர் உறவினர்கள் வந்து சமாதானம் செய்து, இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்தனர். இதன்பிறகுதான், கோதண்டபாணி தனது வசிப்பிடத்தை சைதாப்பேட்டைக்கு மாற்றினார்.ஆனால் இருப்பிடம் மாறினாலும், நிரோஷா-மணிகண்டன் காதல் மாறவில்லை. தொடர்ந்து அவர்கள் தனிமையில் சந்தித்து வந்தார்கள். மணிகண்டன் சைதாப்பேட்டை வீட்டுக்கும் வந்து நிரோஷாவிடம் காதல் லீலைகளில் ஈடுபட்டார். இந்த காதல் விவகாரம் தெரிந்து கோதண்டபாணி கடும் கோபம் கொண்டார். மனைவியுடன் சண்டை போட்டார்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோதண்டபாணி தூங்கியவுடன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன், சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கோதண்டபாணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிரோஷா மறுப்பு

கள்ளக்காதலுக்காக கணவனை, தனது காதலன் மணிகண்டனோடு சேர்ந்து தீர்த்துக்கட்டியது நிரோஷாதான் என்று போலீஸ் விசாரணையில் சந்தேகம் கொண்டனர். ஆனால் கணவரை தான் கொலை செய்யவில்லை என்றும், மொட்டை மாடி வழியாக யாரோ கொள்ளையர்கள் வந்து கொலை செய்து விட்டார்கள் என்றும் நிரோஷா மறுப்பு தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.அவரது காதலன் மணிகண்டனை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் கைது செய்யப்பட்டால்தான், உண்மை நிலவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறினார்கள். நிரோஷாவை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.மணிகண்டனும் திருமணமானவர். அவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த படுகொலை சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com