விவசாயத்தில் ஈடுபட இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என கடலூரில் நடைபெற்ற உலக விவசாயிகள் தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேசினார்.
விவசாயத்தில் ஈடுபட இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்ட உழவர் மன்ற கூட்டமைப்பின் சார்பில் உலக விவசாயிகள் தின விழா கடலூரில் நடைபெற்றது. இதற்கு உழவர் மன்ற கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் கோ.விஜயகுமார் வரவேற்றார்.

விழாவில் கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கலந்து கொண்டு பேசியதாவது:-

நானும் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவன் என்ற அடிப்படையில் இதை நமது குடும்ப விழாவாக கருதி இதில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எத்தனையோ பிரச்சினைகளுக்கு இடையில் விவசாயம் செய்து அதிக அளவில் பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை பாராட்ட வேண்டும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவு, ஆனால் நிலப்பரப்பு அதிகம். இதனால் அங்குள்ள விவசாயிகளுக்கு அதிக பரப்பளவில் விளைநிலங்கள் இருக்கும். ஆனால் நமது நாட்டை பொறுத்தவரை விவசாய நிலத்தின் பரப்பளவு மிகவும் குறைவாக இருக்கிறது.

நமது மாவட்டத்தில் 93 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ளவர்கள். எனவே சிறிய நிலபரப்பில் தான் பயிர் சாகுபடி செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். அதற்கு ஏற்ற தொழில்நுட்பம்தான் நமக்கு அவசியம்.

இன்று சிறு தானியங்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கிறது. விவசாயத்தில் பயிர் சாகுபடி செய்தால் மட்டும் போதாது, அதை விற்பனைக்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு அதிகாரிகள் உதவிகரமாக இருக்க வேண்டும்.

முன்பு பெரும்பாலான சினிமா படங்களில் கதாநாயகன் விவசாயியாக வருவார். அப்போது சினிமாவை பார்க்கும் இளைஞர்களுக்கு தானும் அவரை போன்று விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. ஆனால் தற்போதுள்ள சினிமாக்களில் கதாநாயகன் விவசாயி அல்லாத வேடத்தில்தான் வருவதை பார்க்க முடிகிறது. இதனால் அந்த சினிமாக்களை பார்க்கும் இளைஞர்களும் கதாநாயகனை போல வர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.

இன்று கிராமப்புறங்களில்தான் அதிக இளைஞர்கள் உள்ளனர். விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். விவசாயம் மற்றும் விவசாயம் சம்பந்தமான தொழிலில் ஈடுபட கிராமப்புற இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து விவசாயிகள் கையேட்டை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட புதுச்சேரி டி.வெங்கடபதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இயற்கை விவசாயிகளுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக வேளாண் கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் வேளாண்மைத்துறை சார்பில் ரசாயனம் அல்லாத இயற்கை உரங்கள், செலவில்லா பயிர் பாதுகாப்பு மருந்துகள் தயாரிப்பு குறித்த விளக்கத்துடன் கூடிய பதாகைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் பலா வகைகள், முந்திரி, காய்கறிகள், பூக்கள் ஆகியவையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அசோலா பாசிகள், தீவன புல்வகைகள், பயறு வகைகள் மற்றும் மர தழைகள், தாது உப்பு ஆகியவையும், தனியார் நிறுவனங்கள் சார்பில் வேளாண் உபகரணங்கள், எந்திரங்கள் அரங்கில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்ததை கலெக்டர் பார்வையிட்டார்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் நாட்ராயன், துணை இயக்குனர்(வேளாண் வணிகம்) ஜெயக்குமார், துணை இயக்குனர்(தோட்டக்கலை) ராஜாமணி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து உழவர் மன்ற நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் உழவர் மன்ற கூட்டமைப்பின் பொருளாளர் சீ.விஜயகுமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com