கொல்லிமலையில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து இளைஞர்கள் கண்காணிப்பு: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

கொல்லிமலையில் கொரோனா பரவலை தடுக்க மலைவாழ் இளைஞர்கள் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து மலைப்பகுதிக்கு வருபவர்களை கண்காணித்து வருகின்றனர்.
கொல்லிமலையில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து இளைஞர்கள் கண்காணிப்பு: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை
Published on

சேந்தமங்கலம்,

கொரோனா அச்சுறுத்தலால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லிமலைக்கு வந்து செல்பவர்கள் அடையாள அட்டை, மருந்து சீட்டு, அதிகாரிகள் கடிதம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை காண்பித்து விட்டு அலுவலக பணி, விவசாய பணி உள்ளிட்ட சில பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் காளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டதால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொல்லிமலைக்கு வரும் பட்சத்தில் கொல்லிமலை பகுதியிலும் கொரோனா பரவி விடுமோ என்ற பீதி மலைவாழ் மக்களிடையே எழுந்தது.

இதையடுத்து கொல்லி மலையில் உள்ள 14 ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வனத்துறை சோதனை சாவடிக்கு திரண்டு வந்தனர். மலைப்பகுதிக்கு வரும் சிலரால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே மலைப்பகுதிக்கு எந்த ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் மேலே சென்று வர அனுமதிக்க வேண்டாம். வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தகுந்த ஆவணங்களுடன் வரும் வாகனங்கள் மட்டுமே அத்தியாவசிய பணிகளுக்காக வழக்கம்போல் கொல்லிமலைக்கு சென்று வருகின்றன.

இந்த நிலையில் கொல்லிமலை பகுதியில் உள்ள 14 ஊராட்சி பகுதிகளிலும் சில குறிப்பிட்ட இடங்களில் தற்காலிகமாக சோதனை சாவடி அமைத்து மலைவாழ் மக்கள் மற்றும் இளைஞர்கள் கொல்லிமலைக்கு சென்று வரும் வாகனங்களையும், நபர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வாழவந்திநாடு ஊராட்சியில் கீழ்சோளக்காடு, அரியூர்நாடு ஊராட்சியில் குழிவளவு கிராமத்தில் அப்பகுதி இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர். இதேபோல மற்ற ஊராட்சிகளிலும் மலைவாழ் மக்களும், இளைஞர்களும் தற்காலிக சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com