கலப்பு திருமண உதவித்தொகையை உயர்த்த அரசுக்கு பரிந்துரை : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் தகவல்

கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் கூறினார்.
கலப்பு திருமண உதவித்தொகையை உயர்த்த அரசுக்கு பரிந்துரை : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் தகவல்
Published on

மதுரை,

மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன், ஆணையத்தின் மூத்த விசாரணை அதிகாரி இனியன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு 4 மாவட்டங்களை சேர்ந்த ஆதிதிராவிட மக்களிடம் புகார் மனுக்களை பெற்றதுடன் அவர்களது குறைகளையும் கேட்டறிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை கலெக்டர் நடராஜன், விருதுநகர் கலெக்டர் சிவஞானம், தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஆணையத்தின் துணை தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்கள் டெல்லிக்கு சென்று புகார் மனு கொடுத்தனர். ஆனால் அதனை எளிமைப்படுத்தும் விதமாக ஆணையமே தற்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறது. ஓசூரில் கலப்பு திருமணம் செய்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் கலப்பு திருமணம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாலேயே ஆணவ படுகொலைகள் நடக்கின்றன. தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது 90 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மதுரை மாவட்ட விழிப்புணர்வு கண்காணிப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நேற்று காலை முதல் மாலை வரை நடந்த குறைதீர்க்கும் முகாமில் மதுரை மாவட்டத்தில் 489, தேனி மாவட்டத்தில் 67, விருதுநகர் மாவட்டத்தில் 111, திண்டுக்கல் மாவட்டத்தில் 40 என மொத்தம் 707 மனுக்கள் பெறப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com