சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இழுபறி

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவன் முன்னிலை பெற்றுள்ளார்.
Published on

அரியலூர்,

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,79,108. இதில், ஆண் வாக்காளர்கள் 7,36,655 பெண் வாக்காளர்கள் 7,42,394, திருநங்கை வாக்காளர்கள் 59.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 77.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சந்திரசேகரும், அ.மு.மு.க. சார்பில் இளவரசன், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.சிவஜோதி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ந் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

வாக்கு எண்ணிக்கை நாளான நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டில் வைக்கப்பட்டிருந்த சீல் தேர்தல் அதிகாரியும், அரியலூர் கலெக்டருமான விஜயலட்சுமி, தேர்தல் பொதுப்பார்வையாளர் குல்கர்னி ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது. பின்னர் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. வாக்குப்பதிவு மையத்துக்கு வேட்பாளர்கள் திருமாவளவன், சந்திரசேகர் உள்பட பலர் வந்திருந்தனர்.

பின்னர் பொது வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றின் முடிவில் திருமாவளவன் 25,323 வாக்குகளும், சந்திரசேகர் 24,270 வாக்குகளும், இளவரசன்(அ.ம.மு.க.)3,016, எம்.சிவஜோதி(நாம் தமிழர் கட்சி)2,069, ரவி (மக்கள் நீதி மய்யம்) 475 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவில் 632 வாக்குகள் பதிவாகி இருந்தது.


ஆனால், 2வது சுற்று மற்றும் அதற்கு அடுத்த 8 சுற்றுகள் வரை அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஆனால், 10வது சுற்று முதல் 17வது சுற்று வரை திருமாவளவன் முந்தினார். இருவரும் மாறி, மாறி முன்னிலை பெற்றதால் இரு தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

18வது சுற்று முடிவில், தொல்.திருமாவளவன் 4,41,880 ஓட்டுகளும், சந்திரசேகர்4,28,988 ஓட்டுகளும், இளவரசன் 53,546 ஓட்டுகளும், எம்.சிவஜோதி 33,704 ஓட்டுகளும், ரவி 14,202 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். நோட்டாவில் 13,519 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இதன்படி சந்திரசேகரை விட திருமாவளவன் 12,892 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com