ஆன்லைனில் பாடம் நடத்துவது மாணவர்களுக்கு பயன் அளிக்காது திட்டக்குடியில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

ஆன்லைனில் பாடம் நடத்துவது மாணவர்களுக்கு பயன் அளிக்காது என திட்டக்குடியில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
Published on

திட்டக்குடி,

மத்திய அரசு கல்வி உரிமைச்சட்டம் மூலம் மாநில அரசுகளிடம் இருந்து அதிகாரங்களை பறிக்க முயல்கிறது. கல்வி அதிகாரத்தை மாநில அரசுகளிடம் இணைக்க வேண்டும். கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்த திட்டம் உரிய பயன் அளிக்காது. ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பு வகுப்புகளில் பாடம் நடத்தினால் மட்டுமே மாணவர்களால் பயன்பெற முடியும். அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் வீதம், சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தபால் ஓட்டு

மேலும் வாக்காளர்கள் அனைவரும் விருப்பப்பட்டால் தபால் ஓட்டு அளிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கொடுக்கப்பட்டு வந்த நகைக்கடன் உள்பட அனைத்து வகை கடன்களையும் திடீரென நிறுத்திவிட்டது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

மாலை அணிவிப்பு

முன்னதாக திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு திருமாவளவன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், பெரம்பலூர் மண்டல செயலாளர் கிட்டு, திட்டக்குடி முன்னாள் மாவட்ட செயலாளர் தயா.தமிழன்பன், மகளிரணி மாநில துணை செயலாளர் சரஸ்வதி, மாநில துணை செயலாளர் நெப்போலியன், மாவட்ட அமைப்பாளர் குமார், நகர செயலாளர் கவுதமன், ஒன்றிய செயலாளர் ஜான்செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com