காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப்பெற வேண்டும் - தயாநிதிமாறன் எம்.பி. வலியுறுத்தல்

காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப்பெற வேண்டும் என தயாநிதிமாறன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேருக்கு விதிக்கப்பட்ட இடைநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்து, தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் மக்களவையில் பேசியதாவது:-

காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தி.மு.க. சார்பிலும், எங்களுடைய கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை என்பது விசித்தரமான ஒன்று.

கொரோனா வைரஸ் குறித்த விவாதத்தில், எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்களும் பங்கேற்றோம். அதேசமயம் 50 பேரை பலி கொண்ட டெல்லி வன்முறை குறித்து விவாதிக்கவேண்டும் என நியாயமான ஓர் வேண்டுகோள் விடுத்தோம். அவைக்கு வந்து அந்த சம்பவம் பற்றி உரிய பதில் கூறவேண்டிய உள்துறை மந்திரியும், நாட்டின் பிரதமரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. அப்போது உள்ளபடியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உணர்ச்சிவசப்படுவது தானே இயல்பு.

அதைத்தான் செய்தார்களே தவிர அவையை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு அல்ல. நாடாளுமன்ற நடைமுறை என்பது ஜனநாயக நடைமுறைக்கு உட்பட்டது. எதிர்க்கட்சிகள் அனைவரும் குறிப்பிட்ட அந்த பிரச்சினையை உங்களது கவனத்துக்கு கொண்டு வரவும், நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் இதுமாதிரியான எதிர்ப்புகளை அவையில் கையாண்டோம் என்பதை தவிர வேறு உள் நோக்கம் இல்லை.

எனவே காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற்று, அவர்களை ஜனநாயக கடமையை ஆற்றவிடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com