மராட்டிய சட்டசபை சபாநாயகராக காங்கிரசின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு

மராட்டிய சட்டசபையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Published on

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் முன்னணி ஆட்சி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்காக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பாரதீய ஜனதாவை சேர்ந்த காளிதாஸ் கோலம்கரை தற்காலிக சபாநாயகராக நியமித்து இருந்தார். பின்னர் நேற்றுமுன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலீப் வல்சே பாட்டீல் புதிய தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மராட்டிய சட்டசபை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதையடுத்து, மகா விகாஷ் முன்னணி சார்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நானா பட்டோலே சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

நானா பட்டோலே பாரதீய ஜனதா எம்.பி.யாக பதவி வகித்தவர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாரதீய ஜனதா தலைவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சகோலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்.

பாரதீய ஜனதா சார்பில் முர்பாட் எம்.எல்.ஏ. கிஷான் கத்தோரே களம் இறக்கப்பட்டார். 2 வேட்பாளர்களும் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு வாபஸ் பெற இன்று காலை 10 மணி வரை இறுதி காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்த நிலையில், பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிஷான் கத்தோரே இன்று காலை தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

இதனால் மகா விகாஷ் முன்னணியின் வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே, மராட்டிய சட்டசபையின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவை உறுப்பினர்களை நோக்கி அவர் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார். அவரை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் வழிநடத்தி சென்று சபாநாயகர் இருக்கையில் முறைப்படி அமரவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com