மீரட் நகருக்குள் நுழைய அனுமதி மறுப்பு: பிரியங்காவை தடுத்து நிறுத்திய போலீசார்

குடியுரிமை சட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க பிரியங்கா காந்தி மீரட் நகருக்கு செல்ல முயன்றபோது அவரை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
Published on

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர், மீரட் மற்றும் சில பகுதிகளில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அமைதிப்படுத்தினார்கள்.

மாநிலம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் மொத்தம் 19 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று திடீரென உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகருக்கு சென்றார். அங்கு வன்முறையில் இறந்தவர் மற்றும் காயமடைந்தவர் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

அடுத்து பிரியங்கா காந்தி மீரட் நகருக்கு செல்ல முயன்றார். ஆனால் நகர எல்லையிலேயே அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். 144 தடை உத்தரவு போட்டிருப்பதாகவும், அதனால் நகருக்குள் செல்ல முடியாது என்றும் கூறினர். தடை உத்தரவுக்கான நகலையும் அவரிடம் போலீசார் காட்டினார்கள்.

இதனால் காங்கிரசார் அவர் சந்திக்க இருந்தவர்களை மீரட் நகர எல்லைக்கு வெளியே ஒரு இடத்தில் ஒன்றுகூடச் செய்தனர். அங்கு சென்ற பிரியங்கா காந்தி அவர்களை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி கேட்டு, ஆறுதல் கூறினார். உங்கள் நோக்கத்தை ஆதரிக்கும் வகையில் நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர்களிடம் உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com