கரூர்,
கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை ஒட்டிய அரசு மருத்துவமனை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக நகராட்சிக்கு புகார்கள் சென்றன. அதன் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, கரூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே நகராட்சி சார்பில் பெட்டிக்கடை வைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிமீறி ஆக்கிரமிப்பு செய்து சிறிய அளவில் கட்டிடம் எழுப்பப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்து, அதனை பொக்லைன் மூலம் இடித்தனர். அங்கு தி.மு.க. பெண் பிரமுகர் ஒருவரது பராமரிப்பில் ஜெராக்ஸ் கடை ஒன்று உள்ளது. இதையொட்டியும் சில ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தநிலையில் நேற்று, அங்கு ஆக்கிரமிப்பை அகற்ற பொக்லைனுடன், கரூர் முதுநிலை நகரமைப்பு அலுவலர் அன்பு, வருவாய் அதிகாரி பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர்.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிக்க முயற்சித்தபோது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த தி.மு.க.வினர் மற்றும் வக்கீல்கள், நகராட்சி அதி காரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான கோர்ட்டு உத்தரவினை தருமாறு கேட்டு முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே ஏற்கனவே இடிக்கப்பட்ட சிறிய ஓட்டல் கட்டிடத்தினுள் நின்று கொண்டு பெண் ஒருவர், அடுப்பு, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளே இருக்கையில் எங்களது கடையை மட்டும் எப்படி இடிக்கலாம் என கூறினார். அதனைதொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். எனினும் 3 மணி நேரத்திற்கும் மேலாக போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் அங்கு நின்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.