

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனது. மேலும் தற்போது கோடை வெப்பத்தின் அளவு அதிகரித்து உள்ளது. இப்போது, அக்னி நட்சத்திரத்தை காட்டிலும் கடுமையாக பாதிப்பு இருந்துவருகிறது.
இந்த நிலையில் பெரம்பலூர் ஒன்றிய பகுதிகளில் ஊராட்சி குடிநீர் கிணறுகளில் நீர் மட்டம் 80 அடி முதல் 100அடிக்கு கீழே சென்றுவிட்டது. பல குடிநீர் கிணறுகளில் சுற்றுப்பாறை நீர்கசிவு மற்றும் ஊற்றுகளில் இருந்து நீர் கிணற்றுக்குள் விழுவது குறைந்துவிட்டது.
பெரும்பாலான கிணறுகள் வறண்டுவிட்டன. இதனால், எசனை, கீழக்கரை, வடக்குமாதவி உள்ளிட்ட ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பொதுமக்கள் ஆழ்குழாய் கிணறுகளில் கிடைக்கும் நீரை சிறுக சிறுக சேமித்து எடுத்துச் செல்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டையும், பிற உபயோகத்திற்கும் தடையின்றி தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.