ஊரடங்கு காலத்திலும் அசத்தல்: தூத்துக்குடி துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்குகள் கையாண்டு சாதனை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஊரடங்கு காலத்திலும் ஒரே நாளில் அதிக சரக்குகள் கையாண்டு சாதனை படைத்து உள்ளது.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் அத்தியாவசிய தேவையின் காரணமாக துறைமுகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஊரடங்கு காலத்திலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கப்பல்களை கையாண்டு வருகிறது. அதே போன்று புதிய சாதனைகளுக்கும் சொந்தமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக இரட்டை சாதனையை படைத்து உள்ளது. ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்டும், அதிக நிலக்கரியை கையாண்டும் அசத்தி இருக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 395 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது. இதற்கு முன்பு 1 லட்சத்து 80 ஆயிரத்து 597 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு இருந்தது. இதில் அதிகபட்சமாக 53 ஆயிரத்து 77 டன் தொழிலக கரி மற்றும் அனல்மின்கரி, கிலிங்கர்ஸ், புண்ணாக்கு, காஸ்டிக் சோடா மற்றும் 70 ஆயிரத்து 254 டன் எடை கொண்ட 3 ஆயிரத்து 903 சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டதால் இந்த புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று 9-வது சரக்கு தளத்தில் எம்.வி. கீரின் கேமாக்ஸ் எஸ் என்ற கப்பலில் இருந்து 55 ஆயிரத்து 363 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஒரே நாளில் 55 ஆயிரத்து 105 மெட்ரிக் டன் நிலக்கரி கையாளப்பட்டு இருந்தது.

பாராட்டு

இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கும் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் அவர், சர்வதேச கப்பல் வழி சரக்கு போக்குவரத்து கடந்த நிதியாண்டு கையாளப்பட்ட சரக்குகளை ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டு சற்று குறைவாகவே இருக்கும். சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து செயல்பாடுகளையும் மேம்படுத்துவதற்கு துறைமுகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறி உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com