பெங்களூரு,
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலக நாடுகளை பயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது.
அந்த நோய்க்கு இதுவரை சுமார் 4 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவையும் கொரானா வைரஸ் விட்டு வைக்கவில்லை. 70-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தை பொறுத்தவரை அமெரிக்காவில் இருந்து வந்த பெங்களூருவை சேர்ந்த 40 வயதான கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவருடைய மனைவி, குழந்தை, நண்பர் ஆகியோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் கர்நாடகத்திலும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, அமெரிக்காவில் இருந்து வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருடன் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயரின் கார் டிரைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதன்படி, பெங்களூருவில் மழலையர் பள்ளி முதல் 5-ம் வகுப்பு வரை கடந்த 9-ந்தேதியில் இருந்து காலவரையற்ற விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பெங்களூருவில் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், கிரீஸ் நாட்டில் இருந்து கர்நாடகம் திரும்பிய 26 வயது வாலிபர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூரு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது ரத்தம், சளி மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வக முடிவு நேற்று வந்தது. அதில், அந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை கர்நாடக அரசின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதனால் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் 5 பேரும் பெங்களூருவில் உள்ள ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு அந்த வைரஸ் தாக்கியிருப்பதால், மாநில அரசு உஷாராகியுள்ளது. இதனால் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையில் தேர்வையும் ரத்து சய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் 7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு வருகிற 23-ந்தேதிக்குள் அனைத்து தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர் ஆகிய கல்வி மாவட்டங்களில் 1 முதல் 6-ம் வகுப்பு வரையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த குழந்தைகளுக்கு இன்று (அதாவது நேற்று) முதலே கோடை விடுமுறை தொடங்குகிறது. அந்த குழந்தைகளுக்கு முன்பு நடைபெற்ற 2 பருவ தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, தேர்ச்சி குறித்து முடிவு செய்யப்படும். இந்த முடிவு, பெங்களூருவில் 4 கல்வி மாவட்டங்களை தவிர கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கு பொருந்தாது.
7 முதல் 9-ம் வகுப்பு வரையில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. தேர்வு நாளில் மட்டும் அவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும். வருகிற 23-ந் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. கொரானா வைரஸ் பரவும் என்ற ஆதங்கத்தால் இந்த முடிவு எடுக்கவில்லை. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.