சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒரத்தநாடு சாலையில் தெற்குநத்தம் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான தார்சாலை கலவை தயாரிக்கும் சுடு கலவை எந்திர ஆலை உள்ளது. இங்கு சாலை போடுவதற்கு தேவையான பொருட்களான ஜல்லிக்கற்கள், தார், சிமெண்டு மூட்டைகள் உள்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலைக்கு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 20-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் ஆலையின் இரும்பு கிரில் கேட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 8 லாரிகள், ஒரு பொக்லின் எந்திரம் ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலையின் பங்குதாரர்களான மன்னார்குடி காசுக்கார செட்டி தெருவை சேர்ந்த பூமிநாதன், இருள்நீக்கியை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் அந்த ஆலைக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில் போட்டி காரணமாக இந்த ஆலைக்குள் மர்ம கும்பல் புகுந்து சேதப்படுத்தியதா? அல்லது இந்த தாக்குதல் சம்பவத்திற்கு வேறு எதுவும் காரணம் உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.