வையம்பட்டி,
மணப்பாறை, வையம்பட்டி மற்றும் மருங்காபுரி ஒன்றியங்களில் உள்ள கிராமப்பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பல ஏக்கர் நிலம் இருந்தும் அவற்றில் விவசாயம் செய்ய முடியாமல் ஏராளமானோர் வேறு வேலை தேடி செல்லும் பரிதாப நிலை உருவானது. இதனால் மிகுந்த வேதனையில் இருந்த விவசாயிகள் எப்போது மழை பெய்யும் மீண்டும் தங்களின் விவசாய பணிகளை எப்போது தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்போடு கடந்த 8 ஆண்டுகளாக காத்திருந்தனர்.
விவசாய பணிகள் தீவிரம்
இந்தநிலையில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. இந்த மழையை நம்பி கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்பு இப்பகுதி விவசாயிகள் மீண்டும் விவசாய பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் கள். பலர் தங்கள் நிலங்களில் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மழை தொடருமா? என்ற சந்தேகத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்காவது தீவனம் ஆகட்டும் என்று கம்பு, சோளம் பயிரிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது குளிர் காலம் என்பதால் இந்த நேரத்தில் எள், கொள்ளு, உளுந்து, துவரை உள்ளிட்ட பயிரை நடவு செய்தால் பனியின் குளிரிலேயே வளர வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையோடு பலர் இந்த பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
பச்சைப்பசேல்
இதனால் பாலைவனம் போல் வறண்டு கிடந்த விளைநிலங்கள், எல்லாம் தற்போது பச்சை கம்பளம் போர்த்தியது போல் பச்சைப்பசேல் என காட்சி அளிக்கின்றது. இதனால் வரும் பொங்கல் பண்டிகையின் போது நல்ல நிலையில் அறுவடை கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண் போகாது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் மேலோங்கியுள்ளது.