கீழப்பழுவூர்,
திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த ஆண்டு சாலையின் இரு புறங்களிலும் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த நெடுஞ்சாலை அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர், பொய்யூர், சிறுவலூர், புதுப்பாளையம் ஆகிய கிராமங்களின் பகுதிகளின் வழியாக செல்கிறது. கடந்த ஆண்டு இந்த கிராம மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கினர்.
இதில் பொய்யூர் மற்றும் புதுப்பாளையம் கிராமத்தின் எல்லைக்குள் இருக்கும் நிலங்களுக்கு சென்ட் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். ஆனால் இந்த இரு கிராமங்களுக்கும் இடையே உள்ள கிராமமான சிறுவலூர் பகுதியினருக்கு சென்ட் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கியுள்ளனர். பக்கத்து கிராம பகுதி நிலங்களுக்கு சென்ட் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வழங்கி இருப்பதை கேள்விப்பட்ட சிறுவலூர் பகுதி மக்கள் எங்களுக்கு மட்டும் ஏன் சென்ட்டுக்கு வெறும் ரூ.6 ஆயிரம் கொடுத்தீர்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது.