குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
Published on

சென்னை,

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி காலியாகும் நிலையில் அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், நாடு முழுவதும் ஒரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் 56 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளுக்கு ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், குடியாத்தம், திருவொற்றியூர் உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை செப்டம்பர் 7-ந் தேதிவரை தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு தற்போது நிலவும் கொரோனா போன்ற அசாதாரண சூழ்நிலைகளை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மரணத்தையடுத்து கடந்த பிப்ரவரி மாதத்திலேயே அந்த 2 தொகுதிகள் காலியாகிவிட்டதால் அவற்றுக்கு ஆகஸ்டு மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக செப்டம்பர் 7-ந் தேதிவரை அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்தநிலையில் குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு செப்டம்பர் 7-ந் தேதிக்குப் பிறகு இடைத்தேர்தல் நடைபெறுமா? என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

அந்த இரண்டு தொகுதிகளுக்கும் செப்டம்பர் 7-ந் தேதிவரை இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. அதற்கு பிறகு இடைத் தேர்தலை நடத்த தேர்தல் நடத்த ஆணையம் உத்தரவிட்டால் அதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். 2 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை சரிபார்ப்பது போன்ற முதல்கட்ட பணிகளை தொடங்கி இருக்கிறோம். செப்டம்பர் 7-ந் தேதிக்குப் பிறகு எந்த நேரத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவித்தாலும் தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம்.

வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயரை நீக்குவது தொடர்ந்து பின்பற்றப்படும் நடைமுறையாகும். கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் பட்டியல் அரசிடம் இருந்து கிடைக்கலாம் என்று தெரிகிறது. இல்லாவிட்டால், வழக்கம்போல் அதற்கான விண்ணப்பத்தை உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சமர்ப்பித்தும் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவரின் பெயரை நீக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com