இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பல வழிமுறைகள்
பங்குகள் விற்பனையில் பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த வகையில் புதிய பங்கு வெளியீடுகள், இரண்டாவது பங்கு வெளியீடுகள், ஏலமுறை பங்கு விற்பனை, உரிமைப் பங்கு வெளியீடு, முன்னுரிமை பங்குகள் ஒதுக்கீடு, தனிப்பட்ட முறையில் பங்குகள் ஒதுக்குவது போன்ற பல வழிகள் கையாளப்படுகின்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீடுகள் மந்தமடைந்து இருந்தன. அந்த ஆண்டில் பங்குச்சந்தைகளின் பிரதான பிரிவில் 16 நிறுவனங்கள் மட்டுமே புதிய பங்குகளை வெளியிட்டன. இதன் மூலம் அந்த நிறுவனங்கள் திரட்டிய நிதி ரூ.12,362 கோடியாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 60 சதவீத சரிவாகும்.
பெரும் பின்னடைவு
சென்ற ஆண்டில் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருந்தது. ஏனென்றால் 50 நிறுவனங்கள்தான் பங்கு வெளியிட்டன. இந்த நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் திரட்டிய நிதி ரூ.621 கோடி மட்டுமே.
ஆனால், கடந்த ஆண்டில் தனிப்பட்ட பங்கு ஒதுக்கீடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏனென்றால் மொத்தம் 11 நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் பங்குகள் ஒதுக்கி ரூ.35,238 கோடி திரட்டின. 2018-ஆம் ஆண்டில் இந்த வழிமுறையில் திரட்டப்பட்ட நிதி ரூ.16,587 கோடியாக இருந்தது. ஆக, திரட்டிய நிதி 112 சதவீதம் உயர்ந்தது.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனம், ஏற்கனவே உள்ள பங்குதாரர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட ஒரு விலையில் பங்குகளை வழங்குவதற்கு உரிமை பங்கு வெளியீடு என்று பெயர். இவ்வகை வெளியீட்டில் ஒரு நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அவர்களின் பங்கு மூலதனத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட விகிதத்தில் பங்குகளை அளிக்கிறது. இதன் மூலம் பங்குதாரர்கள் அந்த நிறுவனத்தில் தமது பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இந்த பங்கு வெளியீடுகளில் பொதுவாக பங்கு ஒன்றின் வெளியீட்டு விலை அதன் சந்தை விலையை விட குறைவாக இருக்கும்.
2019-ஆம் ஆண்டில் 12 நிறுவனங்கள் உரிமைப் பங்கு வெளியீடுகள் வாயிலாக மொத்தம் ரூ.52,053 கோடி திரட்டி உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 176 சதவீதம் அதிகமாகும்.
வெளியீடு, ஒதுக்கீடு
இந்நிலையில், 2019 காலண்டர் ஆண்டில் பல்வேறு வகையான பங்கு வெளியீடுகள் மற்றும் ஒதுக்கீடுகள் மூலம் நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.81,174 கோடி திரட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 28 சதவீதம் அதிகமாகும். அப்போது பங்குகள் விற்பனை மூலம் ரூ.63,651 கோடி திரட்டப்பட்டு இருந்தது.
ஒரு நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி அளித்து ஓராண்டிற்குள் அந்த நிறுவனம் பங்கு வெளியிட வேண்டும். தவறினால் அனுமதி காலாவதி ஆகி விடும். 2019-ஆம் ஆண்டில் ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிற்கான 47 நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளுக்கு செபி வழங்கிய அனுமதி காலாவதி ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனங்கள் மீண்டும் புதிய வெளியீட்டில் களம் இறங்க விரும்பினால் மறுபடியும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டி இருக்கும்.
விறுவிறுப்பு அடையும்
நடப்பு 2020-ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டு நடவடிக்கைகள் உத்வேகம் அடையும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறி உள்ளனர். பல நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ள நிலையில், பல நிறுவனங்கள் பங்கு வெளியிட அனுமதி கேட்டு செபிக்கு விண்ணப்பித்து வருகின்றன. இதனால் பங்கு வெளியீட்டுச் சந்தை விறுவிறுப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.