

நாகப்பட்டினம்,
கடல் மீன் பிடிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின்படி மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் சுருக்குமடி, இரட்டைமடி உள்ளிட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதை மீறி மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கிறார்களா? என்பதை மீன்வளத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக நாகை நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை, நாகூர், செருதூர், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர், திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதையொட்டி சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நாகையை அடுத்த வாஞ்சூர், கானூர், மேலையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.
கடலில் தாங்கள் மிகுந்த சிரமப்பட்டு பிடித்து வரும் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகை நம்பியார் மீனவ கிராமத்தினர் அங்குள்ள சமுதாய கூடத்தில் ஒன்று கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும். மீனவர்கள் சிரமப்பட்டு பிடித்து வரும் மீன்களை பறிமுதல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகளை கண்டித்தும் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் மீனவர்கள் முடிவு செய்து அறிவித்தனர்.
அதன்படி நேற்று போராட்டம் நடந்தது. இதன் காரணமாக மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மீனவர்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்தும் 2 வஜ்ரா வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.
போராட்டத்தையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நாகை நம்பியார் நகர் சமுதாய கூடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் மீனவர்கள் ஒன்று கூடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த வலையை பயன்படுத்தி பிடித்த மீன்களை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த உதவி கலெக்டர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தாசில்தார் ஆகியோரின் வாகனங்களை முற்றுகையிட்ட மீனவ பெண்கள் மண்எண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றனர். அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக புறப்பட்டனர்.
அவர்களை ஏழைப்பிள்ளையார் கோவில் அருகே பப்ளிக் ஆபீஸ் சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, கலெக்டர் அலுவலகம் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மீனவ பெண்கள் இரும்பு தடுப்புகளை ஆக்ரோஷமாக தூக்கி எறிந்து அதை தாண்டி செல்ல முற்பட்டனர்.
இதையடுத்து மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் மீனவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மீனவ பஞ்சாயத்தார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து மீனவர்களும் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். ஆயிரம் பேர் சென்று பேசினால் ஆயிரம் கருத்துகள் வரும். இதனால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. மீனவ பஞ்சாயத்தார்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் 20 பேர் மட்டும் வாருங்கள்.
நானே கலெக்டரிடம் பேச்சுவார்த்தைக்காக அழைத்து செல்கிறேன். மீனவ பஞ்சாயத்தார்களின் வார்த்தையை மீனவர்கள் கடைபிடிப்பார்கள் என்று எனக்கு தெரியும். எனவே அனைவரையும் கலைந்து போக சொல்லிவிட்டு, முக்கியமானவர்கள் மட்டும் வாருங்கள். இதுகுறித்து கலெக்டரிடம் பேசி நல்ல தீர்வு காணலாம்.
அதைவிட்டு விட்டு தீக்குளிப்பது என்பது பிரச்சினைக்கு தீர்வாகாது. அனைவரும் கலைந்து செல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மீனவ பஞ்சாயத்தார்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக நாகையில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.
அதேபோல சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி நேற்று பூம்புகார் பஸ் நிலையம் அருகே மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஊராட்சி தலைவர் சசிக்குமார், ஒன்றிய கவுன்சிலர் மதுமிதாரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மீனவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவாக பூம்புகார், தருமகுளம் ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து இருந்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல், பழையார், கொட்டாயமேடு, மன்மதநகர், தாண்டவன்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட கிராமங்களில் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருமுல்லைவாசல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கொள்ளிடம் அருகே மடவாமேடு கிராமத்தில் மீனவர்கள் சாலையின் நடுவே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் பிரபு கூறுகையில், சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை இருப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, பட்டினியால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி அளித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றார். போராட்டத்தையொட்டி அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.