சங்ககிரியில், ரூ.14 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் -வீட்டுக்கு ‘சீல்’ வைப்பு

சங்ககிரியில் வீட்டில் பதுக்கிய ரூ.14¾ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வீட்டுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
Published on

சங்ககிரி,

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அக்கம்மாபேட்டையை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு சொந்தமான வீட்டை கடந்த 3 மாதங்களுக்கு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அந்த வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி, சப் - இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி மைக்கேல், மஞ்சுநாதன் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.

அந்த வீட்டில் 197 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தன. இதில் குட்காவும் இருந்தது.

இதுபற்றி சங்ககிரி உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நேற்று காலை அங்கு வந்து ஆய்வு செய்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் (பொ) புஷ்ப ராஜூக்கும் இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த குட்கா உள்ளிட்ட 197 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு மூட்டையிலும் 50 பண்டல் கள் இருந்தன. ஒவ்வொரு பண்டலிலும் 30 பாக் கெட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.14 லட்சத்து 77 ஆயிரத்து 500 ஆகும். புகையிலை பொருட்களுடன் அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த பொருட்களில் சிறிதளவை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது பற்றி உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் கூறும் போது, புகையிலை பொருட்களை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம். ஆய்வு முடிவு வந்த பின்னர் தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com