காவிரி டெல்டா பகுதியில், இயற்கை வேளாண்மை பல்கலைக்கழகம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க காவிரி டெல்டா பகுதியில் இயற்கை வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Published on

திருவாரூர்,

திருவாரூர் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நமது நெல்லை காப்போம் இயக்கத்தின் தலைவர் துரைசிங்கம், நிர்வாகிகள் ரகுநாதன், வரதராஜன் ஆகியோர் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 15 ஆண்டுகளாக நமது நெல்லை காப்போம் இயக்கம், பாரம்பரிய மற்றும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருகிறது. திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகிறோம். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

தனி பல்கலைக்கழகம்

நமது நெல்லை காப்போம் இயக்கம் பாரம்பரிய விவசாயத்தை முன்னெடுத்து நுகர்வோர்களுக்கு நஞ்சில்லா உணவை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த, மேம்படுத்த மாவட்டந்தோறும் இயற்கை விவசாயத்துக்கு என தனியாக விவசாய இயக்குனர் பதவியை உருவாக்க வேண்டும்.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க இயற்கை வேளாண்மைக்கு என காவிரி டெல்டா மாவட்டத்தில் தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். பாரம்பரிய அரிசி ரகங்களில் இருந்து மருத்துவ குணங்கள் பொருந்திய உயிர் மூலக்கூறு சேர்மங்களை விவசாய பல்கலைக்கழகம் அல்லது நெல் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, அது தொடர்பாக நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நோய் இல்லாத சமுதாயம்

அதன் மூலம் நோய் இல்லாத எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும். பாரம்பரிய அரிசியில் நோய் நீக்கக்கூடிய மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்து உள்ளது. எனவே தமிழக அரசு சத்துணவு மையங்கள், மருத்துவமனைகளில் பாரம்பரிய அரிசியில் சமைக்கப்பட்ட உணவை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாபஸ் பெற வேண்டும்

அதேபோல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட செயலாளர்கள் ஈவேரா, லட்சுமிநாராயணன், நீலகண்டன், ராஜேந்திரன், எழில், குழந்தைசாமி, திருவாரூர் மாவட்ட ஓய்வு பிரிவு மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் முதல்-அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன. மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது அமைச்சர் காமராஜ் உடன் இருந்தார்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

அதேபோல வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் செந்தில்நாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆதப்பன், செய்தி தொடர்பாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் மதிவாணன், செந்தில்குமார், லெட்சுமணன், ராஜாராமன் ஆகியோர் நேரில் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் விவசாய கல்லூரி அமைத்து தர வேண்டும். வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய ஆன்லைன் வர்த்தகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அம்மையப்பன் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருத்துவமனையை கடந்த 2015-ம் ஆண்டு அரசு மூடிவிட்டது. எனவே மக்கள் நலன் கருதி மீண்டும் அந்த மருத்துவமனை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com