கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
Published on

கோவை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 8 மணிக்கு கோவை வந்தனர்.

அவர்களுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் வரவேற்பு கொடுத்தனர்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீலகிரி மாவட்டத்துக்கு செல்கிறார்.

அங்குள்ள பகுதிகளை அவர் முழுமையாக பார்வையிட்ட பின்னர் சேத மதிப்புகள் கணக்கிடப்படும். நீலகிரியில் மழை பெய்த மறுநாளே வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அங்கு சென்று நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார்.

ஆனால் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேடத்தான் நீலகிரி சென்று உள்ளார். அவர் ஒருநாள்தான் அங்கு செல்வார். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. அங்கேயே இருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் அளிப்போம்.

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சரிசெய்ய அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதி ஒதுக்கி, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

கனமழையால் பல இடங்கள் சேதமாகி உள்ளது. எவ்வளவு சேதமாகி உள்ளது என்பதும் அதன் மதிப்பு என்பதும் தெரியவில்லை. மதிப்பீடு தெரிந்த பின்னரே மத்திய அரசிடம் நிதி கேட்க முடியும். தமிழக மக்களுக்கு தி.மு.க. கூட்டணி நல்லது செய்தது இல்லை.

நாட்டு மக்களுக்கு மத்திய அரசு நல்ல திட்டத்தை கொண்டு வந்து அதை செயல்படுத்தி வருகிறது. இதனால் அதற்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளை உடனடியாக முடுக்கி விட்டோம். ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படி அல்ல, அங்கு சென்று பார்வையிட்டு தன்னை விளம்பரப்படுத்துவார். பேட்டியளிப்பார். அதோடு முடிந்து விடும்.

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பு அணை உடைந்தது சரிசெய்யாமல் இருப்பதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாது என்று கூறுவது தவறான கருத்து.

கொள்ளிடம் ஆற்றில் இதுவரை 70 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தண்ணீர் வீணாகாமல் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையை திறப்பதற்காக கார் மூலம் சேலம் சென்றார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கார் மூலம் ஊட்டிக்கு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com