மணிமங்கலம் கிராமத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்

மணிமங்கலம் கிராமத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கால்வாய் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் கிராமத்தில் உள்ள மீனாம்பாள் தெரு, அம்பேத்கர் தெரு, வாசுகி தெரு, ஆலடி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மதகு வழியாக விவசாய நிலங்களுக்கு நீர் செல்லும் மஸ்தான் கால்வாய் உள்ளது.

இந்த பழமை வாய்ந்த கால்வாய் சேதம் அடைந்ததால் கால்வாய் வழியாக செல்லும் நீர் செல்ல முடியாத நிலையில் பல மாதங்களாக தேங்கி கழிவுநீராக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு குடியிருப்பு பகுதிகளின் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கடியால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விவசாய நிலங்களுக்கும் நீர் செல்லாததால் விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் ஏற்கனவே கிராமசபை கூட்டத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் அந்த பகுதி மக்கள் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனிடம் கால்வாய்களை சீரமைத்து தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி நீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வட்டார வளர்ச்சி அலுவலர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து கால்வாய்களை சீரமைத்து தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி சாலையின் நடுவில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையை தோண்டி சிமெண்டு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com