தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 167 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று செவிலியர் உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னை திருவொற்றியூரில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ஒரத்தநாடு சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த 58 வயதான ஆண், திருவையாறை அடுத்த மேலகொண்டயம்பேட்டையை சேர்ந்த 67 வயது பெண், 4 வயது பெண் குழந்தை, கரந்தையை சேர்ந்த 30 வயது ஆண், தஞ்சை மருத்துவக்கல்லூரி கொரோனா வார்டில் பணியாற்றும் 35 வயதான செவிலியர் ஆகிய 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 5 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதே போல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று காலை 4 பேரும், மதியம் ஒருவரும், மாலையில் 8 பேரும் என மொத்தம் 13 பேர் ஒரே நாளில் வீடு திரும்பினர். இவர்கள் பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, கும்பகோணம், தஞ்சை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
127 ஆக அதிகரிப்பு
குணமடைந்து வீடு திரும்பியவர்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி கொரோனா சிறப்பு அலுவலர் டாக்டர் குமுதாலிங்கராஜ், மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மருததுரை ஆகியோர் பழங்கள் மற்றும் சான்றிதழ் கொடுத்து அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் 14 நாட்கள் தங்கள் வீடுகளில் தனிமை படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 127 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.