

புதுடெல்லி,
டெல்லி கல்காஜி பகுதியில் நகை கடை ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பி.பி.இ. (தனிநபர் பாதுகாப்பு சாதன) உடைகளை அணிந்து கொண்டு உள்ளே நுழைகிறார்.
அதன்பின், உடன் கொண்டு வந்திருந்த பையை அங்கிருக்கும் மேஜை மீது வைத்து விட்டு செல்கிறார். திரும்பி வரும்பொழுது, அங்கிருக்கும் தங்க நகைகளை எடுத்து கொண்டு வந்து பைக்குள் போடுகிறார்.
அவர், மேலே வைக்கப்பட்ட பொருட்களை எடுப்பதற்காக மேஜை மீது ஏறி செல்கிறார். இதுபற்றிய காட்சிகள் அனைத்தும் கடைக்குள் வைக்கப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளன. இதனடிப்படையில், நகை கடையில் கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர்.
எனினும், தெரிந்த இடத்திற்கு செல்வது போன்று அந்த நபர் கடைக்குள் சென்றது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. இந்நிலையில், நகை கடையிலேயே பணிபுரிந்த ஊழியர் ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அந்த நபரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.