4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்சாரம் பிரதமர் மோடி உறுதி

நாடு விடுதலையடைந்து 70 ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை மின்சார வசதி பெறாத 4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின் வசதி ஏற்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்சாரம் பிரதமர் மோடி உறுதி
Published on

லே,

பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காஷ்மீர் மாநிலம் சென்றார். அங்குள்ள லே நகரில் நடந்த, புத்த துறவி 19-வது குஷாக் பகுலா ரின்போச்சின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் அவர் பங்கேற்றார்.

இந்த விழாவில் ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் 14 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் சுரங்கச்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆசியாவிலேயே மிக நீண்ட இருதிசை சுரங்கப் பாதையான இது, ரூ.6,800 கோடி செலவில் அமைக்கப் படுகிறது.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

காஷ்மீரில் இன்று (நேற்று) ரூ.25 ஆயிரம் கோடிக்கான வளர்ச்சித்திட்டங்களை அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்துள்ளேன். இதன் மூலம் இந்த மாநில வளர்ச்சியில் மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கும் உறுதிப்பாடு வெளிப்படுகிறது.

2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்த போது நாடு முழுவதும் 18,400 கிராமங்கள் மின்சார வசதியை பெறவில்லை. எனவே ஒவ்வொரு கிராமமும் மின்வசதியை பெறுவதற்காக கொள்கை வகுத்து செயல்பட்டோம். இந்த உறுதிப்பாட்டை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். அனைத்து கிராமங்களும் தற்போது மின்சார வசதி பெற்று இருக்கின்றன.

தற்போதும் 4 கோடிக்கு அதிகமான வீடுகள் இன்னும் மின்சார வசதி பெறவில்லை. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்த பிறகும் மின்சார பல்பை பார்க்காத இந்த வீடுகளுக்கு அடுத்த ஓராண்டுக்குள் மின்வசதி ஏற்படுத்தப்படும். காஷ்மீரிலும் மின்வசதி பெறாத 19 கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்படும்.

லடாக் பிராந்தியத்தில் சூரிய மின்திட்டம் ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இதற்கான பணிகளை நாங்கள் தொடங்குவோம். ஆனால் இங்குள்ள கடினமான நிலப்பரப்பு காரணமாக இங்கிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் மின்சாரத்தை எடுத்து செல்வது மிகவும் சவாலானது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

முன்னதாக லே விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் நரேந்திர மோடி கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு சென்றார். வழியில் அவரை வரவேற்க ஏராளமான மக்கள் சாலையில் குழுமியிருந்தனர். எனவே அவர் காரில் இருந்து இறங்கி, மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இந்த சுரங்கப்பாதை கடல் மட்டத்தில் இருந்து 11,578 அடி உயரத்தில் ஸோஜிலா கணவாயில் அமைக்கப்படுகிறது. 2026-ம் ஆண்டில் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படும் இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்தால், ஸோஜிலா கணவாயை கடக்கும் நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 15 நிமிடங்களாக இது குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து காஷ்மீரின் குரேஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிஷன் கங்கா மின்திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அத்துடன் ஸ்ரீநகர் அணுகுசாலை திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அங்கு அவர் உரையாற்றும் போது, மாநில வளர்ச்சியை விரும்பாத சில வெளிநாட்டு சக்திகள்தான் காஷ்மீரில் இடையூறை ஏற்படுத்துகின்றன. எனவே அவற்றுக்கு நாம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. தவறான வழிகாட்டுதலால் இளைஞர்கள் வீசும் ஒவ்வொரு கல்லும், ஆயுதமும் மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்கின்றன. எனவே இந்த சூழலில் இருந்து காஷ்மீர் மக்கள், வெளியே வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ரம்ஜான் மாதத்தில் இந்த வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட பிரதமர், மாநில வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் மீது முடிவு எடுக்கும் திறன், நோக்கம், கொள்கை போன்றவை மத்திய-மாநில அரசுகளிடம் இருப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com