

மும்பை,
இந்தியா முழுவதும், கடந்த சில மாதங்களாகவே குழந்தை திருடர்கள் என்ற வதந்திகளை நம்பி பலபேர் அடித்துக் கொல்லப்பட்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இந்தியா முழுவதும் இதுவரை 30 பேர் இது போன்ற சம்பவங்களில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுவரும் வதந்திகளின் மூலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுவதாக மத்திய அரசு கருதுகிறது. இதனால், அதில் பகிரப்படும் சந்தேகத்திற்குரிய செய்திகள் மற்றும் வதந்திகளைத் தடுக்கவும், நீக்கவும் வேண்டும் எனக் கூறி, வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதியளித்துள்ளது. மேலும் வதந்திகளை தடுக்க அரசு, சமூகம், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தவறான தகவல்கள், வதந்திகளைத் தடுப்பது சவாலான பணியாக இருக்கிறது என்றும் அண்மையில் நடந்த வன்முறை மற்றும் கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் வாட்ஸ் அப் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.