

டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன், ஹரித்வார் உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி முக்கிய ஆறுகளில் வெள்ள்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராம்கங்கா, விக்டோரிய உள்ளிட்ட முக்கிய அணைகள் முழுவதுமாக நிரம்பியதால், உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஹரித்வாரின் ரிஷிகேஷில், கங்கை ஆற்றின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சாரதா அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 1.5 லட்சம் கன அடி நிர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.