

மும்பை,
மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள உறைவிட பள்ளியில் கடந்த 24-ந் தேதிக்கு பிறகு சில மாணவர்களுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறி ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை மாநகராட்சி அங்குள்ள மாணவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தியது. இதில் அங்கிருந்த 95 மாணவர்களில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அனைத்து மாணவர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், யாருக்கும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட 4 மாணவர்கள் நாயர் ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 12 மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட 6 மாணவர்கள் முறையே ரிச்சர்ட்சன் மற்றும் குருதாஸ் நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.