எம்.பிக்கள் சம்பளத்தை விட்டுத்தர மாட்டோம்: சிவசேனா அறிவிப்பு

பாராளுமன்ற செயல்படாததற்கு மத்திய அரசே காரணம் எனவும், எம்.பிக்கள் சம்பளத்தை விட்டுத்தர மாட்டோம் என்றும் சிவசேனா கட்சி அறிவித்து உள்ளது. #ShivSena
எம்.பிக்கள் சம்பளத்தை விட்டுத்தர மாட்டோம்: சிவசேனா அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

காவிரி விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி பாராளுமன்றத்தில் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பாராளுமன்றம் முடங்கி வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த்குமார் நேற்று பேட்டி அளித்தார். அப்போது, காங்கிரசின் ஜனநாயகமற்ற அரசியல் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நடைபெறவில்லை. அரசு அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு தயாராக உள்ளது. ஆனால் அவர்கள் அவையை செயல்படவிடாமல் முடக்குகிறார்கள்.

நாடாளுமன்றம் செயல்படாத 23 நாட்களுக்கான சம்பளம் மற்றும் படிகளை பா.ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் வாங்கமாட்டார்கள். அந்த பணம் மக்கள் சேவைக்காக வழங்கப்படும். அதை நாங்கள் செய்யவில்லை என்றால், மக்களின் பணத்தை எடுத்துக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்றார்.

இந்த நிலையில், அந்தக்கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி தங்கள் கட்சி எம்.பிக்கள் சம்பளத்தை விட்டுத்தர மாட்டார்கள் என்று அறிவித்து உள்ளது. இது குறித்து சிவசேனா கூறுகையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி ஏறத்தாழ முழுமையாக முடக்கப்பட்ட இந்த நிலைக்கு மத்திய அரசே காரணம். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் நாடாளுமன்றத்தை நடத்த பாஜக விரும்பவில்லை என்று தெரிவித்து உள்ளது. இதேபோல், பாரதீய ஜனதாவுடன் கூட்டணியில் இருக்கும் ராஷ்டிரிய லோக் சம்தா கட்சியும் எம்.பிக்கள் சம்பளத்தை விட்டுத்தரும் முடிவு பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளது.

சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சிகளின் கருத்து குறித்து மத்திய அமைச்சர் அனந்தகுமாரிடம் கேட்ட போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பிக்கள் தங்களது சம்பளத்தை விட்டுத்தருவர்கள் என்று மட்டும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com