மராத்தா சமூகத்தினர் போராட்டம் முடிவுக்கு வந்தது ; இயல்பு நிலைக்கு திரும்பும் மும்பை

மனோஜ் ஜராங்கேவின் பெரும்பாலான கோரிக்கைளை ஏற்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
மராத்தா சமூகத்தினர் போராட்டம் முடிவுக்கு வந்தது ; இயல்பு நிலைக்கு திரும்பும் மும்பை
Published on

மராட்டியத்தில் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு சி.எஸ்.எம்.டி. ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜராங்கே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவருக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மராத்தா சமூகத்தினர் மும்பையை நோக்கி படையெடுத்தனர். இதனால் மும்பை முடங்கியது. குறிப்பாக போராட்டம் நடந்த தென்மும்பை பகுதி ஸ்தம்பித்தது.

தென்மும்பை பகுதிகளில் உள்ள சாலைகளில் திரண்டு மராத்தா சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மராத்தா சமூகத்தினர் போராட்டம் காரணமாக லட்சக்கணக்கான மும்பைவாசிகள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்மும்பை பகுதிக்கு வேலை சென்ற மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதற்கிடையே, இன்று மதியத்துக்குள் சி.எஸ்.எம்.டி.யில் தெருக்களை காலி செய்ய மராத்தா போராட்டக்காரர்களுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் செத்தாலும் தனது கோரிக்கைகள் நிறைவேறாமல் மும்பையைவிட்டு நகர மாட்டேன் என மனோஜ் ஜராங்கே கூறினார்.

இதனால் நேற்று போராட்ட களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க கலவர தடுப்பு பிரிவு, அதிவிரைவு படையினர், மாநில ரிசர்வ் படையினர் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே நேற்று காலை மதியம் 3-க்குள் போராட்டக்காரர்கள் ஆசாத் மைதானத்தை காலி செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து போலீசார் முதல் கட்டமாக மைதானத்துக்கு வெளியில் சி.எஸ்.எம்.டி. பகுதியில் குவிந்து இருந்த போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பிற்பகல் 3 மணியளவில் மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தலைமையில் அரசு சார்பில் மனோஜ் ஜராங்கே பாட்டீலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மனோஜ் ஜராங்கேவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான ஐதராபாத் நிஜாம் அரசிதழ் அடிப்படையில் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு குன்பி சாதி சான்றிதழ் வழங்க சம்மதம் தெரிவித்தது. ,மேலும் மனோஜ் ஜராங்கேவின் பெரும்பாலான கோரிக்கைளை ஏற்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து மனோஜ் ஜராங்கே உண்ணாவிரத பேராட்டத்தை முடித்து கொண்டார். அவருக்கு மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல், பழரசம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.இதையடுத்து ஆசாத் மைதானம் போராட்டக்களம் கொண்டாட்ட பகுதியாக மாறியது. மேலும் ஆசாத்மைதானம், தென்மும்பை பகுதிகளில் இருந்து வெளியேற தொடங்கினர். போராட்டக்காராகள் வெளியேறி வருவதை அடுத்து 5 நாட்களுக்கு பிறகு தென்மும்பை பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com