

புதுடெல்லி,
கடல் பிராந்திய பாதுகாப்பில் ஒத்துழைப் பதற்கான புதிய நெறி முறையை உருவாக்க தலைவர்கள் முடிவு செய்தனர்.
இந்திய குடியரசு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் சிறப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில் ஆசியான் கூட்டமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
மேலும் ஆசியான் அமைப்பில் இந்தியா இணைந்ததன் 25-ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் நடைபெறும் சிறப்பு மாநாட்டிலும் அவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, மியான்மர், பிலிப்பைன்ஸ், புரூனே, லாவோஸ் மற்றும் கம்போடியா நாட்டு தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்.
டெல்லி வந்திருக்கும் இந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் மியான்மர் தலைவர் ஆங்சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே மற்றும் வியட்நாம் பிரதமர் ஜுவான் பக் ஆகியோருடன் நேற்று முன்தினம் தனித் தனியே பேச்சுவார்த்தை நடந்தது.
அந்தந்த நாடுகளுடன் இருதரப்பு உறவு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை அமைந்தன. மேலும் இந்தியாவின் கிழக்கு சார்ந்த கொள்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலான விவகாரங்களும் அதில் இடம்பெற்று இருந்தன.
இதன் தொடர்ச்சியாக நேற்று இந்தியா மற்றும் ஆசியான் நாட்டு தலைவர்கள் கூட்டாக பங்கேற்ற சிறப்பு அமர்வு ஒன்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் கடல் பாதுகாப்பில் சந்திக்கும் சவால்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவில் கடல் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக புதிய வழிமுறை ஒன்றை உருவாக்க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
தென் சீனக்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக சீனாவுக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பிரச்சினையில் சீனாவுக்கும், ஆசியான் கூட்டமைப்பில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை தனியே சந்தித்து, பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான கலாசாரம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் நிதி தொழில்நுட்பம், சுற்றுலா, ஸ்மார்ட் நகரங்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வ விவாதங்களை மேற்கொண்டனர். ஆசியான் கூட்டமைப்பில் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சிங்கப்பூர் விளங்கி வருகிறது.
பின்னர் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது தாய்லாந்தின் மேற்கு சார்ந்த கொள்கைக்கு, இந்தியாவின் கிழக்கு சார்ந்த நடவடிக்கைகள் எப்போதும் ஒத்துழைக்கும் என்று உறுதி அளித்ததாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் தளத்தில் பின்னர் குறிப்பிட்டு இருந்தார்.