தலைநகர் டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு..?

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தீவிரம் சற்று குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு..?
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின்போது, பெருமளவில் காற்று மாசு கட்டுப்பட்டு இருந்தது. ஆறுகளில் நீரும் தெளிந்து இருந்தது. கொரோனா பரவல் குறைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின் காற்று மாசு மெல்ல அதிகரிக்க தொடங்கியது.

தீபாவளிக்குப் பின்னர் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு மிகவும் மோசமடைந்தது. இதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

காற்றின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் டெல்லி மாநகர் பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காற்று மாசு தீவிரம் சற்று குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எனினும், டிசம்பர் 3ம் தேதி வரை அத்தியாவசிய தேவைப் பொருட்களை தவிர பிற பொருட்களை ஏற்றி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மாநகரில் நுழைய தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யும் முறை வருகின்ற திங்கட்கிழமை வரை தொடரும். அதன்பின், பணிக்கு செல்வோர், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரம் நேற்று சற்று மேம்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் மோசமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com