ஒடிசாவில் முதல் பா.ஜ.க. ஆட்சி.. பதவியேற்பு விழா 12ம் தேதிக்கு மாற்றம்

ஒடிசா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ.க. உறுப்பினர்களின் முதல் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
Odisha BJP govt swearing date change
Published on

புவனேஸ்வர்:

ஒடிசாவில் முதல் முறையாக பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 147 தொகுதிகள் கொண்ட ஒடிசாவில், பா.ஜ.க. 78 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை தொடங்கியது. புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

ஒடிசாவின் முதல் பா.ஜ.க. அரசு ஜூன் 10-ம் தேதி பதவியேற்கும் என என பிரதமர் மோடி தனது பிரசாரத்தின்போதே கூறியிருந்தார். பா.ஜ.க. மாநில தலைவர் மன்மோகன் சமனும் நேற்று அதனை உறுதி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் பதவியேற்பு விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழா 10-ம் தேதியில் இருந்து 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக கட்சியின் முக்கிய தலைவர்களான ஜதின் மொகந்தி, விஜய்பால் சிங் தோமர் ஆகியோர் இன்று தெரிவித்தனர். மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில், பதவியேற்பு விழா, எம்.பி.க்களுடன் சந்திப்பு என பிரதமர் மோடி பிசியாக இருப்பதால் ஒடிசா பதவியேற்பு தேதி மாற்றப்பட்டிருப்பதாக கூறினர்.

இன்று பிரதமர் மோடி பதவியேற்கிறார். நாளை கட்சி எம்.பி.க்களை சந்திக்க உள்ளார். எனவே, ஒடிசா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ.க. உறுப்பினர்களின் முதல் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 11) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர் (முதல்-மந்திரி) தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஒடிசாவின் புதிய முதல்-மந்திரி யார்? என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. யாருடைய பெயரையும் பா.ஜ.க. தலைமை அறிவிக்கவில்லை. மூத்த பா.ஜ.க. தலைவரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுமான சுரேஷ் பூஜாரி டெல்லிக்கு சென்றுள்ளார். எனவே, அவர் முதல்-மந்திரி பதவிக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கலாம் என பேசப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com