

மும்பை,
மராட்டியத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் நினைவுநாளையொட்டி, அவரை வாழ்த்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நேற்றுமுன்தினம் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர்களது கோரிக்கையை சபாநாயகர் நானா பட்டேலே நிராகரித்தார். இதனால் சபையில் அமளி உண்டானது.
இந்த பிரச்சினை தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய பாரதீய ஜனதா அரசு வீர சாவர்க்கரை கவுரவித்ததா என மராட்டிய பாரதீய ஜனதா தலைவர்கள் கேட்க வேண்டும். குடியரசு தினத்தன்று ஏன் மத்திய அரசு சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. அதுபற்றி பாரதீய ஜனதாவினர் பேசுவார்களா? சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டி தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதங்கள் என்ன ஆனது. அந்த கடிதங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இது மராட்டியம் மற்றும் வீர சாவர்க்கரை அவமதிப்பதாகும்.
சாவர்க்கரை ஒரு கேடயமாக பயன்படுத்துவதன் மூலம் புதிய தேசியவாத அரசியலை பாரதீய ஜனதா விளையாடுகிறது. சாவர்க்கர் மீதான பாரதீய ஜனதாவின் அன்பு போலியானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.