புதுடெல்லி,
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டு கூறியதால், அவருக்கும், டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கும் இடையே மோதல் உருவானது.
இந்த விவகாரத்தில் சிறைத்துறையில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளான சத்திய நாராயணராவ், ரூபா ஆகியோரை கர்நாடக அரசு நேற்று அதிரடியாக பணி இடமாற்றம் செய்துள்ளது. ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கர்நாடக மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து உள்ளனர். ரூபாவை இடம் மாற்றம் செய்த கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
டி.ஐ.ஜி. ரூபா இடமாற்றத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் டிஐஜி ரூபா இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பாரதீய ஜனதா எம்.பி. சோபா கரன் பேசுகையில், கர்நாடகாவில் 24 அரசியல் கொலைகள் நடந்து உள்ளது, ஆனால் கர்நாடக காங்கிரஸ் அரசு இவ்விவகாரத்தில் தீவிரமாக இல்லை. திடீரென டிஐஜி ரூபாவை இடமாற்றம் செய்தது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.