லோயர்கேம்ப் - குமுளி இடையே மலைப்பாதையில் ஆபத்தான பாறைகளால் விபத்து அபாயம்

லோயர்கேம்ப்-குமுளி இடையே மலைப்பாதையில், ஆபத்தான பாறைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
Published on

கூடலூர்,

கூடலூர் நகர சபையின் 21-வது வார்டு பகுதியாக லோயர்கேம்ப் அமைந்துள்ளது. இங்கிருந்து குமுளிக்கு செல்ல வனப்பகுதியில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இந்தப் பாதையில் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தினசரி 100-க்கும் மேற்பட்ட ஜீப்கள் சென்று வருகின்றன.

இது தவிர கேரள மாநிலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும், புனித யாத்திரையாக சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களும் இந்த மலைப்பாதை வழியாக சென்று வருகின்றன. இந்த மலைப்பாதை அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளுடன், சில இடங்களில் மிகவும் குறுகலாகவும், பெரிய பாறைகளுடனும் காணப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் பள்ளமான வனப்பகுதிகள் உள்ளதால் ஆங்காங்கே தடுப்பு கம்பிகளும், சுவர்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் பெய்த மழையினால் மாதா கோவில் மேலே உள்ள கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. அதையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மண்மேடுகளை அகற்றி பாறைகளை வெடி வைத்து உடைத்து அகற்றினர்.

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் ஆங்காங்கே பெரிய பாறைகள் சரிந்து ரோட்டில் உருண்டு விழுந்து விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. மலைப்பாதையில் 3-வது மேம்பாலம் அருகே ஒரு பாறை மரத்தில் சாய்ந்து எப்போது கீழே விழுமோ? என்ற நிலையில் உள்ளது. எனவே உயிர் பலி ஏற்படுவதற்கு முன் ஆபத்தான பெரிய பாறைகள் இருப்பதை கண்டறிந்து அவற்றை அகற்ற வனத்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முன் வர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com