ஆத்தூர் ஒன்றியத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை

ஆத்தூர் ஒன்றியத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆத்தூர் ஒன்றியத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை
Published on

செம்பட்டி,

ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வக்கம்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கிற விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில், அதிக வருமானம் கிடைப்பதால் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் செழித்து வளர்ந்து கதிர் விட்டுள்ளது. இதில் 10-ல் ஒரு கதிரை படைப்புழுக்கள் தாக்கியுள்ளன. அவை சோளக்கதிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் மகசூல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிரில் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 20 முதல் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் படைப்புழு தாக்கத்தால் 50 சதவீத மகசூல் குறைந்து வருகிறது. இதனால் முதலீடு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தினாலும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே வேளாண்துறை அதிகாரிகள் ஆத்தூர் ஒன்றிய பகுதியில் முகாமிட்டு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கிடையே வேளாண்துறையினர் அந்த பகுதிக்கு வந்து நோய் தாக்குதலுக்கு உள்ளான பயிர்களை பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com