முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக் கைது

முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக்கை போக்சோ மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் முதன்முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Published on

திருச்சி,

உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம்பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் மிக அதிகம்பேர் பார்ப்பதாகவும், குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியது.

இதையடுத்து தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இதைவைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது தமிழகத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் பட்டியலில் சென்னை மாநகரம் முதல் இடத்தை பிடித்தது.

இணையதளம், முகநூல் (பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதும், பதிவிறக்கம் செய்து அதை பலருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றம் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்பவர்கள், பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரித்து இருந்தார். வழக்கமாக ஆபாச படங்களை பார்த்தவர்கள், கைது ஆகலாம் என்ற அச்சத்தில் இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை பார்ப்பதை நிறுத்த தொடங்கினர். ஆனால் சிலர் சொந்த பெயர் இல்லாமல் புனைப்பெயர்களில் முகநூலில் ஆபாச படங்கள், வீடியோக்கள் பதிவிடுவதை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் முதன்முறையாக முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த நபரை, திருச்சி மாநகர போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சமூக ஊடகப்பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர், கடந்த 11-ந் தேதி காலை தனது பணியின்போது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றை கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது முகநூல் பக்கம் ஒன்றில் நிலவன் நிலவன் என்ற பெயரில் கணக்கு தொடங்கி, அந்த முகநூலுக்கு ஒரு செல்போன் எண்ணை பதிவு செய்து, அந்த முகநூல் பக்கத்தில் குழந்தைகள் தொடர்பான பல்வேறு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சைபர் கிரைம் புலனாய்வு பிரிவு போலீசார் மூலமாக அந்த நபரின் முகநூல் பக்கத்தை தீவிரமாக கண்காணித்தபோது, அதில் மேலும் பல்வேறு குழந்தைகளின் ஆபாச படங்களும், வீடியோக்களும் பதிவிடப்பட்டு கொண்டே இருந்தன. மேலும் அந்த செல்போன் எண்ணுக்குரிய முகவரியை ஆய்வு செய்தபோது, திருச்சி காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (வயது 42) என்பவருடையது என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸ்காரர் முத்துப்பாண்டி, திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 13, 14, 15 மற்றும் அதனுடன் இணைந்த 67 (ஏ)(பி)(பி), தொழில்நுட்ப சட்டம் 200 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி புலன் விசாரணை நடத்தி, குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்களை முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கிறிஸ்டோபர் அல்போன்சை நேற்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தார்.

கைதான அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ஐ.டி.ஐ. ஏ.சி. மெக்கானிக் படித்துள்ளதும், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சில மாதங்கள் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. கடந்த மாதம் அவர் வேலையை விட்டு விட்டு திருச்சி வந்துள்ளார்.

குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தனது செல்போனில் தொடர்பில் உள்ள இதர எண்களுக்கு அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இதற்கு முன்பு ஆதவன் ஆதவன் என்ற முகநூல் பக்கத்தை தொடங்கி, அதிலும் குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்களை பதிவிட்டுள்ளார். அந்த முகநூல் பக்கத்தை வலைத்தள சேவை நிறுவனம் முடக்கி விட்டதால், நிலவன் நிலவன் என்ற முகநூல் பக்கத்தை தொடங்கியுள்ளார், என்பது தெரியவந்தது. மேற்படி குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிடுவதை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வருவதாகவும், தான் அதற்கு அடிமையாகி விட்டேன் என்றும் போலீசிடம், கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரது முகநூல் பக்கத்தில் உள்ள ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நீக்கினர். அத்துடன் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் உள்ள குழந்தைகளின் ஆபாச படங்கள் சம்பந்தமான தகவல்களை பெற தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து கிறிஸ்டோபர் அல்போன்சை நேற்று காலை 11 மணிக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நீதிபதி வனிதா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ கூறுகையில், குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வைத்திருப்பதும், பதிவிடுவதும், பகிர்வதும் ஐ.டி. ஆக்ட் (தொழில்நுட்ப சட்டம்) 67(ஏ)(பி)(பி)-ன்படி குற்றமாகும். இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் மற்றும் போக்சோ சட்டப்பிரிவு 13, 14, 15-ன்படி, மேற்படி குற்றத்தை புரிபவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இணையதளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்து சமூக சீர்கேட்டிற்கு வழிவகை செய்யும் இதுபோன்ற நபர்கள் மீது போக்சோ சட்டத்தின்படியும் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com