கூடலூர்,
மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் தமிழக- கர்நாடகா மாநிலங்கள் இணையும் பகுதியில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு உள்ள தெப்பக்காடு பகுதியில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு செங்குத்தான மலைப்பாதை செல்கிறது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கூடலூர் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்படுகிறது. இதுதவிர காட்டுயானைகள், புலிகள், கரடிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், சிறுத்தைப்புலிகள் என வனவிலங்குகளின் புகலிடமாகவும் முதுமலை திகழ்கிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள ஆறுகள் இறுதியாக மாயார் வழியாக பவானிசாகர் அணையில் கலக்கிறது. மேலும் வனவிலங்குகளின் தாகத்தை தணிக்கும் நீர்நிலையாக மாயார் உள்ளது.
காலை, மாலை நேரத்தில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து மாயார் ஆற்றுக்கு வருவது வழக்கம். இந்த சமயத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் கடந்த காலங்களில் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை காணப்பட்டது. இதனால் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில் இருந்து கூடலூர் எல்லையான தொரப்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மிதமான வேகத்தில் வரும் வகையில் பெரும்பாலான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. இதனால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் குறைந்தது. மேலும் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கக்கூடாது என்று வனத்துறை சார்பில் பல இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எச்சரிக்கையை மீறி அதிவேகத்தில் வாகனங்களை இயக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மாயார் ஆற்றுக்குள் விழும் நிலை தொடர்கிறது. நேற்று முன்தினம் சரக்கு வேன் ஒன்று கூடலூர் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் வேகமாக மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. தொடர்ந்து மாயார் ஆற்றுக்குள் சரக்கு வேன் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளனருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் உடனடியாக சரக்கு வேன் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதேபோல் அதிவேகமாக இயக்குவதால் சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் விபத்தில் சிக்கி வருகிறது. இதனால் முதுமலை சாலைகளில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.