ஆனைமலை அருகே, திருமண வீட்டில் பீரோக்களை உடைத்து 24 பவுன் நகை திருட்டு - ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி மர்ம நபர்கள் கைவரிசை

ஆனைமலை அருகே திருமண வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி, பீரோக்களை உடைத்து 24 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆனைமலை அருகே, திருமண வீட்டில் பீரோக்களை உடைத்து 24 பவுன் நகை திருட்டு - ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி மர்ம நபர்கள் கைவரிசை
Published on

ஆனைமலை,

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த காளியாபுரம் சோமநாதபுரம் உப்பாறு ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது60). விவசாயி. இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுடைய மகளுக்கும், கொடுங்கியத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு விழா பொள்ளாச்சியை அடுத்த நா.மூ.சுங்கம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக தங்கவேல் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். அங்கு வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

நேற்று காலை திருமணம் நடைபெற இருந்ததால், வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த உடன் இரவு 11 மணி அளவில் தங்கவேல் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தார். அவர் வீட்டின் கதவை திறந்து குடும்பத்தினருடன் வீட்டிற்குள் சென்றார். அப்போது வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன.இதைபார்த்து தங்கவேல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டின் மேலே பார்த்த போது மர்ம நபர்கள் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி 24 பவுன் தங்க நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிர மணி, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோவையில் இருந்து வந்த கைரேகை நிபுணர் லோகேந்திரன் தடயங்களை பதிவு செய்தார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோக்களை நெம்பி உடைத்து உள்ளனர். பின்னர் அவர்கள் பீரோவில் இருந்த பெரிய நகை பையை மட்டும் திருடி உள்ளனர். ஆனால் அதன் அருகே இருந்த சிறிய நகை பை மற்றும் பணத்தை எடுக்காமல் சென்று விட்டனர். இதனால் அந்த நகை மற்றும் பணம் தப்பி உள்ளது.

திருமண வீட்டில் நகை, பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதனால் அவர்கள் தெரிந்த நபர்களாக தான் இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com