பொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு பண்ணை வீட்டில் மதுவிருந்து; கேரள மாணவர்கள் 150 பேர் சிக்கினர்

பொள்ளாச்சி அருகே மதுவிருந்தில் போதையில் ஆட்டம் போட்ட கேரள கல்லூரி மாணவர்கள் 150 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மதுவிருந்தில் தடை செய்யப்பட்ட கோகைன் என்ற போதை பொருள் பயன்படுத்தியது அதிர்ச்சி அளிப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு பண்ணை வீட்டில் மதுவிருந்து; கேரள மாணவர்கள் 150 பேர் சிக்கினர்
Published on

ஆனைமலை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தென்னை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தென்னந்தோப்புகளுக்கு நடுவே ஓய்வு எடுக்க பண்ணை வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றில் சில உரிய அனுமதி இல்லாமல் கேளிக்கை விடுதிகளாக செயல்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை அடுத்த சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல ஏராளமான சொகுசு விடுதிகள் செயல்படுவதாக புகார்கள் உள்ளன. இங்கு போதை பொருள் மற்றும் மதுவிருந்து தாராளம், சூதாட்டம், அழகிகளுடன் வந்து தங்குவது நடன விருந்து என்று இங்கு கேளிக்கை விருந்துகள் அமர்க்களப்படும்.

சுற்றுலா பயணிகள் போர்வையில் இங்கு பலர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் விடுதிகளை ஒட்டிய வனத்திற்குள் இரவு நேரங்களில் வேட்டையாடுதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. ஆனாலும் உள்ளூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேத்துமடை அருகே ஒரு சொகுசு விடுதியாக இயங்கிய பண்ணை வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நள்ளிரவு வரை ஏராளமான மோட்டார் சைக்கிள்கள், கார்களில் இளைஞர்கள் செல்வதாகவும், அதிக சத்தத்துடன் பாட்டு வைத்து கூச்சலிடுவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு புகார் சென்றது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ஆனைமலைக்கு திடீரென்று வந்தார். பின்னர் அவரது தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் என 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

இதில், சேத்துமடை அருகே அண்ணா நகரில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் தென்னந்தோப்புகளுக்கு நடுவே அக்ரி நெஸ்ட் என்ற சொகுசு விடுதி செயல்படுவது தெரிய வந்தது. அந்த சொகுசு விடுதியை அதிகாலை 3 மணிக்கு போலீசார் சுற்றி வளைத்தனர். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் விரட்டிச் சென்று அவர்கள் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில் கேரளாவில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 150 பேர் இருப்பது தெரியவந்தது. இதில் ஒருவர் மட்டும் பெண். அவர்கள், 23 கார்கள், 55 மோட்டார்சைக்கிள்களில் வந்துள்ளனர். அவர்கள் வார இறுதி நாள் கொண்டாட்டத்திற்காக அங்கு கூடியுள்ளனர்.

இதில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.1200 கட்டணமாக வசூலித்ததும் தெரிய வந்தது. 100-க்கும் மேற்பட்டோர் மது அருந்தி உள்ளனர். சிலர் கஞ்சா பயன்படுத்தி உள்ளனர். சிலர் கோகைன் எனப்படும் விலையுயர்ந்த போதை பொருளை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த தோட்டத்தில் இருந்து மதுபாட்டில்கள், கஞ்சா பொட்டலங்கள், கோகைன் பொட்டலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தோட்டத்தில் மேடை அமைத்து, பெரிய அளவிலான ஸ்பீக்கர்கள் வைத்து பாட்டு பாடி மாணவர் கள் கும்மாளமிட்டுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை செய்த தோட்டத்தின் உரிமையாளர் கணேசன் (வயது 45), சொகுசு விடுதி உரிமையாளர் அருண் பிரதீப்(48), சேத்துமடையை சேர்ந்த மேலாளர் கமால் என்ற கமாலுதீன் (28) மற்றும் மேடை அமைத்து ஒலிபெருக்கி பொருத்தியவர்கள், நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்தவர்கள் என மொத்தம் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மது போதையில் இருந்த மாணவர்கள் மீது பொது இடத்தில் மது குடித்ததாக வழக்குபதிவு செய்து போலீசார் அபராதம் விதித்தனர். பின்னர் அவர்கள் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர்.

சொகுசு விடுதியில் போலீஸ் அதிகாரிகள் சோதனையின் போது வருவாய்த்துறை அலுவலர்களும் உடன் இருந்தனர். அப்போது சொகுசு விடுதிக்கு உடனடியாக சீல் வைக்கும்படி கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து வருவாய்த் துறையினர் அந்த சொகுசு விடுதிக்கு நேற்று மதியம் சீல் வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com