காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் கலெக்டர் அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனால், காரைக்காலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, பாரதியார் வீதி, காமராஜர் வீதி, திருநள்ளாறு வீதி, மாதாகோவில் வீதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை, சம்பந்தப்பட்ட வணிகர்கள், குடியிருப்புவாசிகள் தாமாக முன்வந்து உடனே அகற்ற முன்வரவேண்டும். மீறும் பட்சத்தில், எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் குறிப்பிட்ட ஆக்கிரமிப்புகளை ஓரிரு நாளில் அகற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
கலெக்டரிடன் உத்தரவை ஏற்று ஒரு சிலர் கடந்த 2 நாட்களாக தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று காலை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்து தலைமையில், நகராட்சி அதிகாரிகள் மாதாகோவில் வீதி, பாரதியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில், சாலை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் பணி தொடர்ந்து நடைபெறும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்ற வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். நேற்று பாரதியார் வீதியில் உள்ள ஒரு வங்கி அருகில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, வணிகர்கள் தங்கள் வசதிக்காக அமைத்த சிமெண்டு, டைல்ஸ் தரைகள் பெயர்த்து எடுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து முன்னாள் அமைச்சர் நாஜிம் அங்கு வந்து வியாபாரிகளோடு சேர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் எந்திரத்தை மறித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வணிகர்கள் சிலர் பாரதியார் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது, பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து, இது 144 தடை உத்தரவு உள்ள பகுதி. இதற்கு மேல் இங்கு கும்பலாக கூடி போராட்டம் செய்யக்கூடாது என எச்சரித்தனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நாஜிம் மற்றும் வியாபாரிகள் போலீசாருடன் கடும் வாக்குவத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் அந்த போக்குவரத்து பாதிக்கப்பட்டது.